கடவுளின் திருவிளையாடல் – ஒரு காமெடி கதை divine fun story | ஒரு பிரசத்தி பெற்ற கோயில் ஒன்றில் நம்ம ஆளு ஒருத்தர் சாமி கும்பிட போயிருந்தார். சாமி கும்பிட்டுவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக அதனருகில் சென்றார். தன்னுடைய பின் பாக்கெட்டில் இருந்து ஒரு ரூபாய் நோட்டை எடுத்து பார்த்தார். அது கொஞ்சம் கிழிந்து ஒட்டியும் ஒட்டாதது போல ஒரு 10 ரூபாயாக இருந்தது. வெளியில் யாரிடமாவது கொடுத்தால் அதை வாங்காத அளவில் அழுக்காய் இருந்தது. பிச்சைக்காரனிடம் கொடுத்தால்கூட, அவர்கள் தன்னை ஏற இறங்கப் பார்ப்பார்கள் என்ற அளவிற்கு அந்த ரூபாய் நோட்டு இருந்தது.
அதனால் அதை கடவுளிடமே காணிக்கையாக செலுத்தி விடலாம் என்று எண்ணி, எப்படியும் அதை வங்கியில் கொடுத்து கடவுள் மாற்றிக் கொள்வார் என்ற நம்பிக்கையில் அந்த கிழிந்த நோட்டை உண்டியலில் போட்டார் நம்ம பக்திமான். போட்டது மட்டுமல்லாமல் ஒருவித பெருமிதத்தோடு திரும்பினார்.
அப்பொழுது குள்ளமாக இருந்த ஒரு மனிதர் அவரிடம் 2000 ரூபாய் நீட்டி கொடுத்தார். இவரால் இந்த உயரத்தில் எட்டி உண்டியலில் பணம்போட முடியாது என்ற காரணத்தினால் தான் தன்னிடம் கொடுக்கிறார் என்று மனதிற்குள் நினைத்து கொண்டு, அதனை வாங்கி உண்டியலில் செலுத்தி விட்டு திரும்பிப் பார்க்கும் பொழுது அந்தக் குள்ள மனிதர் அங்கு இல்லை.
கடவுளின் திருவிளையாடல் – ஒரு காமெடி கதை divine fun story
2000 ரூபாய் அளவிற்கு உண்டியலில் காணிக்கை செலுத்தும் அந்தக் குள்ள மனிதரை நினைத்து பெருமைப்பட்டார். தரிசனம் முடித்துவிட்டு கோயில் வெளியே வரும்பொழுது, நம்ம ஆளு அந்தக் குள்ள மனிதர் சைக்கிள் எடுப்பதைப் பார்த்தார். இந்த ஏழ்மை நிலையிலும் கடவுளுக்கு இவ்வளவு காணிக்கை அளிக்கிறார் என்று மனதிற்குள் வியந்து கொண்டு அவரை பாராட்டியே ஆக வேண்டும் என்ற நோக்கில் அவர் அருகில் சென்றார்.
அவரிடம்.. “சார் நீங்கள் உண்மையிலேயே பெரிய ஆளு, கடவுள் மேல உங்களுக்கு அவ்வளவு பக்தி” என்றார்.
அந்த குள்ள மனிதருக்கு ஒன்றும் புரியாமல், “ஏன் அப்படி சொல்றீங்க” என்று கேட்டார்.
பின்ன என்ன சார், உண்டியல்ல இரண்டாயிரம் ரூபா…போட்டிருக்கீங்க, பின்ன என்ன சும்மாவா…. எவ்வளவு பக்தி உங்களுக்கு என்றார்”, நம்ம பத்து ரூபாய் பக்திமான்
அந்த குள்ள மனிதருக்கு மறுபடியும் விளங்காமல், “நான் எப்ப சார் இரண்டாயிரம் ரூபாய் போட்டேன் உண்டியல்ல” என்று கேட்டார்.
“கோயிலுக்குள்ள உண்டியல் பக்கத்துல, நீங்க என்கிட்ட கொடுத்தீங்களே, 2000 ரூபா, உங்களால போட முடியல” ன்னு “அப்புறம் நானும் அதை உங்ககிட்ட வாங்கி உண்டியல்ல போட்டேனே” என்று கேட்டார் நம்ம ஆளு.
“அட நீங்க வேற!… நீங்க உங்க பின் பாக்கெட்ல இருந்து காசு எடுக்கும்போது, அது கீழே விழுந்துச்சு, அதான் அதை எடுத்து உங்க கிட்ட கொடுத்தேன், அவ்வளவு தான்” என்று சொல்லி விட்டு சைக்கிளை எடுத்து கிளம்பினார் குள்ள மனிதர்.
அதைக் கேட்டவுடன் நமது பத்து ரூபாய் பக்திமான் அங்கேயே மயங்கி கீழே விழுந்து உருள ஆரம்பித்தார்.
அப்போது அங்கிருந்த ஒருவர் சொல்கிறார், “அடடா என்ன ஒரு பக்தி இவருக்கு”
இதுதான் கடவுளின் திருவிளையாடல் …!!!
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram |Android app|