Disguise of God! கடவுளின் வேஷம்! – சிறுகதை (தென்கச்சி கோ சுவாமிநாதன்)
ஒரு கோயில் மண்டபம். அங்கு, கடவுளைப் பற்றி பேசிக் கொண் டிருந்தார் சாமியார் ஒருவர். நிறையப் பேர் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
இதை, மேலே இருந்து கவனித்துக் கொண்டிருந்தார் கடவுள். ‘இந்த மனிதர்கள் எப்பவும் நம்மைப் பற்றியே பேசுகிறார்களே!’ என்று நினைக்கும் போது கடவுளுக்குப் பெருமையாக இருந்தது.
‘சரி… நேரில் போய் அவர்களைப் பார்த்து விட்டு வரலாம்’ என்று அங்கிருந்து புறப்பட்டார்.
சாமியார் பேசிக் கொண்டிருந்த கோயில் மண்டபத்தின் அருகே வந்து சேர்ந்தார். ஆலயத்தின் வெளியே இருந்த ஓர் அரச மரத்தின் அடியில் நின்றார்.
Disguise of God!
அப்போது, வெளியே வந்த பக்தர் ஒருவர், ”வேஷப் பொருத்தம் பிரமாதமா இருக்கு!” என்றார் கடவுளைப் பார்த்து.
கடவுளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. ”ஐயா, நான்தான் உண்மையான கடவுள்!” என்றார்.
உடனே, ”என்கிட்டே சொன்னதோட வெச்சிக்க. வேற யார்கிட்டேயும் சொல்லிடாத. பிறகு, உன்னைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில கொண்டு போய் விட்டுடுவாங்க!” என்றார் பக்தர்.
”நான் சொல்றதைக் கொஞ்சம்…”
கடவுள் ஏதோ சொல்லத் துவங்குவதற்குள், அவரை இடை மறித்த பக்தர், ”ஒண்ணும் சொல்ல வேணாம். முதல்ல இடத்தைக் காலி பண்ணு. கூட்டம் முடிஞ்சி, சாமியார் வெளியே வர்ற நேரம் இது… அதுக்குள்ளே போயிடு!” என்று கூறிச் சென்றார்.
வெளியே வந்த பக்தர்கள் எல்லாம் இவரைப் பார்த்துவிட்டு, சந்தேகத்தோடு விலகிப் போக ஆரம்பித்தார்கள். கடைசியாக சாமியார் வந்தார். பார்த்தார்.
”ஏம்பா… இப்படி இங்கே வந்து கலாட்டா பண்றே? பேசாம போயிடு!”
”என்னைப் பற்றி பிரசங்கம் பண்ற உனக்குமா என்னை அடையாளம் தெரியலே?”
எதுவும் அவர்கள் காதில் விழவில்லை. கடைசியாக, கடவுளை ஓர் அறையில் தள்ளிப் பூட்டி விட்டுப் போய் விட்டார்கள்.
வேறு வழியில்லை. கடவுள், கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.
நள்ளிரவு நேரம். கதவைத் திறந்து கொண்டு மெள்ள உள்ளே வந்தார் சாமியார்.
”கடவுளே! என்னை மன்னிச்சிக்குங்க… நீங்கதான் கடவுள்னு எனக்கு அப்பவே தெரியும்!”
”அப்புறம் என்ன… அந்த ஜனங்கள்கிட்டே சொல்ல வேண்டியதுதானே!”
”சொல்லி இருந்தா, என்னையும் பைத்தியம்னு சொல்லி உள்ளே தள்ளி இருப்பாங்க!”
கடவுள் சிந்திக்க ஆரம்பித்தார்.
‘இந்த மனிதர்களுக்கு, இருக்கிற கடவுளைக் காட்டிலும் இல்லாத கடவுள் மீதுதான் அதிக நம்பிக்கை இருக்கிறது!’ என்று மனதுக்குள் எண்ணியவர் அங்கிருந்து மறைந்து போனார்.
(3 ஜூன் 2008 சக்திவிகடன் இதழிலிருந்து…)
Follow us
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram |